ரொம்பப் பழங்காலத்துப் பழக்க வழக்கங்களை இப்போதும் கைவிடாமல் வைத்துக் கொண்டிருப்பவர்களை சுத்தக் கர்நாடகமான ஆள் என்று சொல்வார்கள். கர்நாடக அரசியல்வாதிகள் இப்போதும் நாங்கள் கர்நாடகம்தான் என்று நிரூபித்துவிட்டார்கள். கர்நாடகாவின் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பி.ஜே.பி. அரசு மீது முன்னாள் முதல்வர் குமாரசாமி தொடர்ந்து பல ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிவந்தார். இவற்றை ஆதாரப்பூர்வமாக மறுக்க முடியவில்லை எடியூரப்பாவால். பார்த்தார் எடியூரப்பா, "என் மீது நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று தர்மஸ்தாலா மஞ்சுநாத சுவாமி முன்பு சத்தியம் செய்யத் தயாரா?" என்று குமாரசாமிக்கு பகிரங்க சவால் விட்டார். குமாரசாமியும் தயார் என்றார்.
பின்னர் பி.ஜே.பி.யின் தேசிய செயற்குழு, பொதுக்குழு என்று எதில் கூடி முடிவெடுத்தார்களோ தெரியாது, சத்தியமெல்லாம் பண்ணவேண்டாம் என்று எடியூரப்பா தன் சவாலை வாபஸ் வாங்கிவிட்டார். ஆனாலும் குமாரசாமி தான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று ஜூன் 14 அன்று தர்மஸ்தாலா மஞ்சுநாத சுவாமி முன்பு மனதுக்குள்ளேயே மூன்று முறை சத்தியம் செய்ததாகக் கூறியுள்ளார்.
பொதுவாக அரசியலில் பொய்க்குற்றச்சாட்டுக் கூறினால் மறுப்பு அறிக்கை விடுவார்கள், மீறினால் அவதூறு வழக்குத் தொடர்வார்கள். ஆனால் கர்நாடக அரசியல்வாதிகளோ ஆயிரம் ஆண்டுகள் பின்னால் போய் சத்தியம் செய்ய முடியுமா, துண்டப் போட்டுத்தாண்ட முடியுமா என்கிறார்கள். ஆனாலும் நம்ம ஊர் பகுத்தறிவு அரசியல்வாதிகளைவிட இந்தப் பத்தாம்பசலி அரசியல்வாதிகள் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் 2ஜி ஊழல் குற்றச்சாட்டு ஆ.ராசா மீதும் தி.மு.க.மீதும் சுமத்தப்பட்டபோது பகுத்தறிவுச் சூரியன் கருணாநிதி அவர்கள், முதலில் மெளனமாக இருந்தார். பின் ராசா தலித் என்பதால் பழிவாங்கப் படுவதாகக் கூறி ஜாதிப் பிரச்னையைக் கிளப்பிப் பார்த்தார். பின்னர் தி.மு.க.வை அழிக்க டெல்லியில் சதி நடப்பதாகக் கூறினார். அப்புறமா, 1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் என்கிறார்கள்; அது எவ்வளவு பெரியதொகை! அதை ஒருவரால் செய்ய முடியுமா? அவ்வளவு பணத்தை ஒருவர் எங்கே மறைத்து வைக்க முடியும்? என்பன போன்ற "பகுத்தறிவு"ப்பூர்வமான கேள்விகளை எழுப்பினார். இப்போது மெளனமாக உயர்நிலைச் செயற்குழுவைக் கூட்டுவதும், திகார் ஜெயிலுக்குப் போய்வருவதுமாக இருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டு பற்றி அவர் இப்போது மூச்சுக்கூட விடுவதில்லை. இந்தக் கல்லுளிமங்கத்தனமான பகுத்தறிவு அரசியலைவிட சுத்தக் கர்நாடகமான அரசியல் எவ்வளவோ பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ம்....பாவம் ஊழல் அரசியலில்கூட கர்நாடகம் தமிழ்நாட்டு அரசியலைவிடப் பிந்தங்கியே உள்ளது.
No comments:
Post a Comment