எனக்கு நினைவு தெரிந்து ஒருநாள் வீட்டில் அலமாரித் தட்டுகளின் இடுக்குகளில் சிக்கிக் கொண்டிருந்த 1 பைசா, 2 பைசா நாணயங்களை என் "கடின உழைப்பால்" கைப்பற்றி ஆர்வத்துடன் கடைவீதிக்கு ஓடினால், கடைக்காரர் அவையெல்லாம் செல்லாது என்று கடுங்கோபத்தில் வீசியெறிந்த போதுதான் காசுகளும் ஒருநாள் செல்லாமல் போகும் என்று அறிந்து கொண்டேன்.
அதன்பின்னர் ஒருநாள் 5பைசா, 10 பைசா, 20 பைசா காசுகள் செல்லாமல் போயின. அப்புறம் ஒருநாள் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நோட்டுகள் கிழிந்து கந்தலாகி வழக்கொழிந்து போயின. அதற்குப் பதிலாக ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் காசுகள் அறிமுகமாயின. தற்போது ஐந்து ரூபாய் நோட்டுகளும் பத்து ரூபாய் நோட்டுகளும் உடல் தளர்ந்து தங்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் இடத்தைப் பிடிக்க ஐந்து ரூபாய், பத்து ரூபாய் காசுகள் மெல்லப் புழக்கத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. இப்போது ஜூலை முதல் தேதி முதல் 25காசு நாணயம் இனிச் செல்லாது என்று வேறு சொல்லிவிட்டார்கள்.
ஏனிப்படி? பொருளாதார நிபுணர்கள் ஏதேதோ மிரட்டும் வார்த்தைகள், தத்துவங்களைச் சொல்கிறார்கள். அவற்றில் பணவீக்கம் என்பது மட்டும் ஏதோ பழக்கமான வார்த்தைபோல் இருக்கிறது. ஆனால் அர்த்தம் ஒன்றும் ஆகவில்லை. ஒருமுறை தோழர் ஆனந்தன் பணவீக்கம் என்றால் என்னவென்று பொருளாதாரக் கலைச்சொற்கள் இல்லாமல் எளிமையாக விளக்கியதில் ஏதோ கொஞ்சம் புரிந்தது. அரசாங்கம், மனிதனுக்குத்தேவையான எந்தப் பொருள் உற்பத்தியும் செய்யாத இராணுவம், காவல்துறை, தன் வெள்ளையானை அரசு நிர்வாகத்திற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்ட ரூபாய்நோட்டுகளை அச்சடித்து வெளியிடுகிறது. இதனால், நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளுக்குச் சமமதிப்புள்ள உற்பத்திப் பொருட்கள் இல்லாமல் போய்விடுகிறது. பணம் அதிகமாகவும் அதைவைத்து வாங்கக்கூடிய பொருட்கள் குறைவாகவும் ஆகிவிடுகிறது. இதனால் பொருளின் விலை உயர்ந்து பணத்தின் மதிப்புக் குறைந்துவிடுகிறது. அதுதான் பணவீக்கம் என்று சொன்னார். ஏதோ இதை எழுதுமளவுக்காவது அது புரிந்தது.
யோசித்துப் பார்த்தால் சில ரூபாய் நோட்டுகள் காசுகளாவதற்கும், சில காசுகள் செல்லாமல் போவதற்கும் இந்தப் பணவீக்கம் தான் காரணம் போலிருக்கிறது. பணவீக்கத்தால் பணத்தின் மதிப்பு குறைந்துபோவதால், முன்பு 25 பைசாவை எடுத்து வேட்டியின் முனையில் முடிந்துகொண்டு மூக்குப்பொடி வாங்கக் கடைவீதிக்குப் போன நம் தாத்தா, இப்போது ஒரு ரூபாய் நோட்டை எடுத்து முடிந்துகொண்டு போகிறார். இப்படி மதிப்புக் குறைந்துபோன ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நோட்டுகளை அவசரச் செலவுக்கு, கைச் செலவுக்கு, பஸ் செலவுக்கு, டீச் செலவுக்கு என்று மக்கள் மாறி, மாறித் தங்கள் கையிலும் சட்டைப் பையிலும், வேட்டி மடிப்பிலும் சேலை முடிச்சிலும், மடித்தும், சுருட்டியும் அடிக்கடி கொண்டுபோவதால் அவை கந்தலாகிக் கிழிந்துபோகின்றன. அதனால் அரசாங்கம் கிழிந்துபோன நோட்டுகளுக்குப் பதிலாக அடிக்கடி புதிய நோட்டுகள் அச்சடிக்க வேண்டியுள்ளது. அதனால் அதிக செலவும் ஆகிறது. எனவே அத்தகைய ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக சுருட்டி வைத்துக் கிழிக்க முடியாதபடி காசுகளாக அச்சடித்து விடுகின்றனர். இப்படித்தான் நோட்டுகள் காசுகளாகின்றன.
வெளியிடப்பட்ட அந்தக் காசுகளில் ஒன்றை மட்டும் வைத்து மக்கள் எதுவும் வாங்க முடியாமல் போகும்போது அக்காசுகளும் செல்லாமல் போனதாக அறிவிக்கப் படுகின்றன. இல்லாவிட்டால் அக்காசினால் வாங்க முடிந்த பொருளின் மதிப்பைவிட அக்காசு செய்யப் பயன்படுத்தப் பட்டுள்ள உலோகத்தின் மதிப்புக்கூடிப்போனால், மக்கள் காசுகளை உருக்கி உலோகமாக விற்க ஆரம்பித்துவிடுவார்கள்.
கடந்த பல ஆண்டுகளாகவே குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் ஆகக் குறைந்த விலை புளிப்பு மிட்டாய்கூட 25 பைசாவுக்கு வாங்க முடியவில்லை. நடைமுறைப் பொருளாதார நிபுணர்களான நமது பெட்டிக் கடைக்காரர்கள் ஒரு ரூபாய்க்கு மூன்று மிட்டாய்கள் என்று எப்போதோ விற்கத் துவங்கிவிட்டார்கள். விஷயம் இப்போதுதான் நமது ரிசர்வ் வங்கியின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது போலும். தினமணி (28.06.2011) அடடே -மதி கார்டூனில் இரண்டு பிச்சைக்காரர்கள் பேசிக் கொள்வது உண்மையை உறைக்க வைக்கிறது: " அட.... இதப் பாருப்பா! பத்துப் பதினைந்து வருஷத்துக்கு முன்னாடியே நாம அறிவிச்சுட்டத இப்பத்தான் அறிவிக்குது ரிசர்வ் வங்கி". நமது பிச்சைக்காரர்களும்கூட பொருளாதார நிபுணர்கள்தானோ ரிசர்வ் வங்கியைப் போல.
1 comment:
hmmmm
Post a Comment