என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளப் பெரிதாக ஒன்றுமில்லை. பள்ளி நாட்களில் இருந்தே கம்யூனிச சிந்தனைகளில் ஈடுபாடு உண்டு. SUCI கட்சியில் இணைந்து 1993ம் ஆண்டு வரை செயல்பட்டேன். SUCI புரட்சியை நடத்தாது என்ற நிலையில் அதிலிருந்து பிரிந்து தோழர் சேர்மன் சங்கர்சிங் தலைமையில் இந்திய மண்ணில் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் முயற்சியிலிருக்கும் Communist Worker's Platform (CWP) ல் இணைந்து செயல்பட்டுக் கொண்டுள்ளேன். தென்மாநிலங்களின் பொதுச்செயலாளர் தோழர் ஆனந்தனின் வழிகாட்டுதலில் மார்க்சிய இயக்கவியல் பார்வையைக் கற்றுவரும் மாணவன் நான். இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டும் பணியில் தோழர்களுடன் இணைந்திருக்கிறேன்.
பள்ளியில் பாரதி கவிதைகளை வாசித்ததினால் ஏற்பட்ட தமிழார்வம் கொஞ்சம் உண்டு. அந்த ஆர்வக் கோளாறினால் நமக்கு இது தகுமா என்று உணராது அவ்வப்போது சில துணிகரச் செயல்களிலும் ஈடுபடுவது உண்டு. சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது தமிழில் நல்ல சட்டநூல்கள் இல்லாமல் நான் மிகவும் சிரமப்பட்டேன். நான்பட்ட சிரமங்களை இனிவரும் மாணவர்களும் படக்கூடாது என்ற எண்ணத்தில் சட்டம் முடித்து வெளியே வந்த கையோடு தமிழில் சில சட்டநூல்களையும் எழுதி வெளியிட்டது அத்தகைய செயல்களுள் ஒன்று.
நம் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றியாக வேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் இரண்டு ஆண்டுகாலமாக முயன்று மொழிபெயர்த்துத் தமிழில் தொகுத்து நான் வெளியிட்ட தியாகி பகத்சிங்கின் கடிதங்கள், கட்டுரைகள் அடங்கிய "கேளாத செவிகள் கேட்கட்டும்...." நூல் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. அதை அப்படியே அச்சுப்பிழையுடன் ஈயடிச்சான் காப்பியடித்து DYFI ம் பாரதி புத்தகாலயமும் "விடுதலைப் பாதையில் பகத்சிங்" என்ற பெயரில் வெளியிட்டதும் மறக்க முடியாத அனுபவம்தான்.
இருந்தாலும் ஒரு சமூக மாற்றத்திற்கு உகந்த சமூகமாகத் தமிழ் மண்ணைப் பண்படுத்தவல்ல பல நூல்களைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற என் ஆவல் இன்னும் தீர்ந்துவிடவில்லை........ என் தகுதியையும் மீறி......
No comments:
Post a Comment