[கம்யூனிச இயக்கத்தின் இன்றைய தேக்கநிலையைக் கடந்து சமூக மாற்றத்தை நோக்கிப் பயணிக்க விரும்பும் - கட்சி அரசியலின் எல்லை தாண்டி கம்யூனிச அரசியல் வழியில் சிந்திக்க முடிந்த - உண்மையான கம்யூனிசத் தோழர்களின் சிந்தனைக்கும் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும்]
நூற்று அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸ் சொன்னார்: கம்யூனிச பூதம் ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது என்று. அன்றிலிருந்து இன்றுவரை அந்தக் கம்யூனிச பூதத்திடமிருந்து முதலாளித்துவத்தைக் காப்பாற்ற முதலாளித்துவப் பேயோட்டிகள் பலர் தோன்றி தங்களுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் பயன்படுத்தி அதை விரட்ட முயற்சித்துக் கொண்டுள்ளனர்.
நம் நாட்டிலோ பேய், பிசாசுகளை ஓட்டும் கோடாங்கிகளுக்கும் ஆவிகளை ஏமாற்றித் தப்பும் தந்திரக் கதைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் எந்தப் பஞ்சமுமில்லை. அந்தத் தந்திரங்களையே கம்யூனிசப் பேயை விரட்டுவதற்கும் இந்தியாவின் முதலாளித்துவப் பேயோட்டிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம்தான். அந்தத் தந்திரங்களுக்கு இந்தியாவின் கம்யூனிஸ்டுகளும் இரையாகிக் கொண்டுள்ளனர் என்பது அதைவிட ஆச்சரியமானதே.
இந்துக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு. இறந்து சுடுகாட்டில் புதைக்கப் பட்டவர், ஆவியாகிய பின்னரும் தன் கணவன் அல்லது மனைவி-மக்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் நள்ளிரவில் சுடுகாட்டில் இருந்து கிளம்பி தன் வீடு தேடி வருவார் என்பதே அந்த நம்பிக்கை. அதற்காக அந்த ஆவியை தந்திரமாக ஏமாற்றுவதற்காக , இறந்தவரின் பிணத்தை சுடுகாட்டிற்குத் தூக்கிச் செல்லும்போது ஒவ்வொரு முச்சந்தியிலும் மூன்று முறை சுற்றுவார்கள். அதாவது ஆவிக்கு வந்தவழி தெரியாமலிருக்க அதைக் குழப்புகிறார்களாம். அத்துடன் வீட்டிலிருந்து சுடுகாடு வரை வழிநெடுகிலும் எள்ளும் கடுகும் வீசியெறிந்து கொண்டே வருவார்கள். இது எதற்கென்றால், முச்சந்தியில் மூன்று முறை சுற்றியதால் வழிகுழம்பிப்போன அவரது ஆவி அந்த எள்ளையும் கடுகையும் அடையாளம் வைத்துக் கொண்டே வருமாம். நள்ளிரவில் சுடுகாட்டில் இருந்து திரும்ப வீட்டிற்குக் கிளம்பும் அந்த ஆவி அடையாளத்திற்காக வீசியெறியப்பட்ட எள்ளையும் கடுகையும் பின்பற்றி அவற்றை ஒவ்வொன்றாகத் தேடியெடுத்துக் கொண்டே வந்த வழியைக் கண்டுபிடித்து வருமாம். எள்ளும் கடுகும் உருவில் மிகச் சிறியவையாக இருப்பதால் ஆவியால் அவற்றை சுலபமாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் அதன் வேகம் தாமதப்படுமாம். அதற்குள் விடிந்துவிடுமாம். விடிந்தவுடன் பாதிவழி வரை வந்த ஆவி தான் இதுவரை சேகரித்த எள்ளையும் கடுகையும் மறுபடியும் அடையாளத்திற்காக வழிநெடுகப் போட்டுக் கொண்டே சுடுகாட்டிற்குத் திரும்பிப் போய்விடுமாம். தினந்தோறும் நள்ளிரவில் தொடங்கும் அந்த ஆவியின் பாசப் பயணம் இப்படி நடுவழியில் முடிந்து போவதே அதன் வாடிக்கையாகிவிடுமாம். ஆவிகளை ஏமாற்ற எப்படி ஒரு தந்திரம். இந்தத் தந்திரத்தைத்தான் கம்யூனிஸ்டுகளை ஏமாற்றி அவர்களின் இலட்சியப் பயணத்தை நடுவழியில் திசைமாற்றி விடுவதற்கும் முதலாளித்துவவாதிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
எல்லா ஜாதிகளிலும், எல்லா மதங்களிலும், எல்லா இனங்களிலும் உள்ள உழைக்கும் மக்களை அணிதிரட்டி எல்லா ஜாதிகளிலும், எல்லா மதங்களிலும், எல்லா இனங்களிலும் உள்ள உடைமை வர்க்கங்களை எதிர்த்துப் போராடி சோசலிஷ சமூக மாற்றம் காணப் புறப்படுகின்றனர் கம்யூனிஸ்டுகள். (வேறெதெற்காகவோ கிளம்பிவிட்டு நாங்களும் கம்யூனிஸ்டுகள் தான் என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் அல்ல என்பது நினைவிற்கொள்ளத்தக்கது)
ஆனால் சோசலிஷ சமூகம் காணப் புறப்பட்ட கம்யூனிஸ்டுகள் தங்கள் இலக்கை அடைய விடாமல் அவர்களைக் குழப்பி வழிமாற்றி விடுவதற்காக, ஜாதிப் பிரச்னை, ஜாதி ஒழிப்பு, ஒடுக்கப்பட்ட ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு - ஒடுக்கும் ஜாதிகளுக்கும் இடஒதுக்கீடு ( இரண்டுக்கும் சேர்த்து "சமூகநீதி" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்), இந்த ஜாதியை அந்தப் பட்டியலில் சேர்க்கக் கோரும் போராட்டம் அல்லது அந்த ஜாதியை இந்தப் பட்டியலில் சேர்க்காதே என்று கோரும் போராட்டம், பார்ப்பனியம், பார்ப்பனிய மேலாதிக்கம்... இந்து-முஸ்லீம் பிரச்னை, இந்து-கிறிஸ்தவர்கள் பிரச்னை, சிறுபான்மை மதவுரிமை, பெரும்பான்மை பாசிசம்... இன ஒடுக்குமுறை, இனவிடுதலை, இனப்பிரச்னை, போதாக்குறைக்கு பக்கத்து நாட்டின் இனப்பிரச்னை... பழங்குடி இனமக்கள் விடுதலை, பழங்குடி மக்களின் புராதன வாழ்வைப் பாதுகாப்போம்... ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசிய உணர்வு, இந்திய இறையாண்மை... சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரபணு மாற்றப்பட்ட பருத்தி-காய்கறிகள், இயற்கை வேளாண்மை, அணு உலை எதிர்ப்பு, அணுஆயுத ஒழிப்பு, அணுஆயுதம் வைத்திருக்கும் இந்தியாவின் உரிமை...இன்னும்...இன்னும்... இப்படி - கம்யூனிஸ்டுகளின் இலட்சியப் பாதையில் முதலாளித்துவவாதிகளால் நாளும் வீசியெறியப்பட்டுக் கொண்டிருக்கும் எள்ளும் கடுகும் ஏராளம்... ஏராளம்.
நாங்களும் கம்யூனிஸ்ட்கள்தான் என்று சொல்லிக் கொள்பவர்களும் தங்களது அடிப்படைக் கோட்பாடுகள் - கொள்கைகளையெல்லாம் மறந்து, தாங்கள் போகவேண்டிய இலட்சியப் பாதையையும் மறந்து முதலாளித்துவவாதிகளால் வீசியெறியப்பட்ட தங்களது இலட்சியத்திற்கே விரோதமான அந்த எள்-கடுகுகளையெல்லாம் தேடி எடுத்துக் கொண்டுள்ளனர். இவற்றையெல்லாம் முன்னுக்குக் கொண்டுவந்து நிறுத்தி உழைக்கும் மக்களின் போராட்டம் வர்க்கப் பாதையில் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்வதற்கென்றே முதலாளித்துவ ஏஜெண்டுகளும் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் ஏராளம் இருக்கின்றனர்.
ஜாதிப் பிரச்னை மட்டுமே தங்களது முதலும் முழுதுமான இலக்காகக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தை ஜாதி அடிப்படையில் பிளவுபடுத்தும் ஜாதி அமைப்புகளும் தன்னார்வ என்.ஜி,ஓ-க்களும்; இனப்பிரச்னையைத் தாண்டி எந்த இலக்கோ திட்டமோ இல்லாத இனவாத அரசியல் நடத்தி தொழிலாளி வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்தும் இனவாத அமைப்புகளும் அரசியல் கட்சிகளும்; தொழிலாளி வர்க்கம் படும் சொல்ல முடியாத துன்பங்கள்-துயரங்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் சிறுபான்மை மதவுரிமை பற்றி மட்டுமே கடைசிவரை கவலைப்படும் மதவாத அமைப்புகளும் அவைசார்ந்த அரசியல் இயக்கங்களும் ; சுற்றுச் சூழலைக் கெடுக்கும் முதலாளித்துவத்திலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப மனிதகுல முன்னேற்றம் பற்றி அக்கறையில்லாது விஞ்ஞான வளர்ச்சியே எல்லாவற்றிற்கும் காரணம் என்று ஏமாற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் தன்னார்வ என்.ஜி,ஓ-க்களும்; கண்ணுக்கு முன்னால் கொடூரமாகச் சுரண்டிக் கொண்டிருக்கும் உள்நட்டு முதலாளிகளை எதிர்க்காத - ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தாண்டி எந்த இலக்கும் இல்லாத ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகளும் தன்னார்வ என்.ஜி,ஓ-க்களும் என -இப்படி முதலாளித்துவ ஏஜெண்டுகள் பலரும் பல ரூபங்களில் முன்தோன்றி "என் பிரச்னைக்கு என்ன பதில், எங்களுக்காக இதைச் செய், அதைச் செய்யாதே, இதைப் பார், இதில் உன் கருத்தைச் சொல் இதற்காகப் போராடாத நீயெல்லாம் ஒரு கம்யூனிஸ்டா? " என்று ஆளாளுக்கு உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் பேசுகின்றனர்; ஒவ்வொருவரும் தங்கள் பிரச்னையைக் காட்டிலும் வர்க்கப் போராட்டம்- சமூக மாற்றம் ஒன்றும் அத்தனை அவசரமில்லை என்று கோபம் கொப்பளிக்கக் கூறுகின்றனர்; தர்க்கரீதியான எதிர்வாதம் எதையும் எவரும் முன்வைத்துவிடக் கூடாது என்று முன்கூட்டியே திட்டமிட்டு குருட்டுத்தனமான உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றனர்; முடிவில் இவர்களின் இலக்குகளையெல்லாம் தாண்டி மனிதகுலத்தையே விடுவிக்கும் உன்னதமான இலட்சியத்தை இலக்காகக் கொண்ட கம்யூனிஸ்டுகளை இறந்துபோனவரின் ஆவியைப் போல் இந்த எள்-கடுகுப் பிரச்னைகளுக்குள் கட்டிப் போட்டுவிடுகின்றனர். இப்படித்தான் கம்யூனிஸ்டுகளின் வேலைத்திட்டத்தை கம்யூனிஸ்டு அல்லாதவர்கள் தீர்மானித்துக் கொண்டுள்ளனர்.
வர்க்க உணர்வை ஏற்படுத்தி தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டும் கடினமான வேலையைக் காட்டிலும் ஜாதி, மத, இன உணர்வுகளுக்கு ஏற்கனவே ஆட்பட்டிருக்கும் மக்களை அந்த உணர்வுகளை அப்படியே பயன்படுத்தி அணிதிரட்டுவது எளிதாக இருப்பதாலும், முதலாளித்துவச் சுரண்டலின் அடிமடியில் கைவைக்காத இத்தகைய தடம் மாறிய போராட்டங்களுக்கு முதலாளித்துவ ஊடகங்கள் தரும் முக்கியத்துவத்தில் மதிமயங்குவதாலும் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் தங்கள் லட்சியத்தை மறந்து அதற்கு நேரெதிரான பாதையில் முதலாளித்துவவாதிகள் போட்டுவைத்த இந்த வட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி "புரட்சிகர" அரசியல் நடத்தப் பழகிக் கொள்கின்றனர். மனிதனின் நினைவாற்றல் குறைவானது; பொதுமக்களின் நினைவாற்றல் அதனினும் குறைவானது. இருந்தாலும் குறைவான நம் நினைவாற்றலுக்குள் யோசித்திப் பார்த்தாலும்கூட கடந்தகாலங்களில் நம் "கம்யூனிஸ்டுகள்" வீராவேசத்துடன் போராடிய போராட்டங்களில் எத்தனை சதவீதப் போராட்டங்கள் தொழிலாளி வர்க்க நலன் சார்ந்தவை என்று கணக்குப் பார்த்தாலே உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
இறந்த மனிதர் எத்தனை படித்த அறிவாளியாக இருந்தாலும் ஆவியாக மாறியபின் அந்த அறிவையெல்லாம் இழந்து , மனிதர்களின் எள்-கடுகுத் தந்திரத்தில் தினமும் ஏமாந்து கொண்டிருக்கிறார் என்பது வேண்டுமானால் மூடநம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் கம்யூனிஸ்டு என்று கூறிக் கொள்பவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்வில் எத்தனை படித்தவர்களாக, அறிவாளியாக, சிறந்த அறிவுஜீவியாகக்கூட இருந்தாலும் வர்க்கப் போராட்டப் பாதையில் பயணிக்கும் கேள்வி வரும்போது மட்டும் தன் புத்திச்சாலித்தனம் அனைத்தையும் இழந்து முதலாளித்துவவாதிகளின் இந்த எள்-கடுகுப் போராட்டத் தந்திரங்களுக்கு எளிதில் பலியாகிவிடுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையே.
கம்யூனிச பூதத்தை அதன் இலட்சியப் பயணத்தில் இருந்து வழிமாற்றும் தந்திரமாக முதலாளித்துவப் பேயோட்டிகளால் வீசியெறியப்படும் இந்த எள்-கடுகுப் பிரச்னைகளில் திசைமாறாது பயணிக்கும் உறுதியான - உண்மையான கம்யூனிஸ்டுகளை உருவாக்குவோம். ஐரோப்பாவை மட்டுமல்லாது இன்று உலகம் முழுவதையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் கம்யூனிச பூதம் கோடிக்கால் பூதமெனத் திரண்டெழுந்து உலகையே அடிமைப் படுத்தி வைத்திருக்கும் கொடிய முதலாளித்துவ-ஏகாதிபத்திய அரக்கனிடமிருந்து இந்த மனிதகுலத்தை விடுவிக்கட்டும்.
புரட்சி நீடூழி வாழ்க!
1 comment:
கம்யூனிஸ்டுகளின் பாதையில் வீசி எறியப் பட்டிருக்கும் இந்த எள்ளும் கடுகும் அவர்களின் பாதையில் உள்ள தடைக் கற்களே.. இந்த ஒவ்வொரு பிரச்சினைகளிலும் ஆராயும் பொழுது, அதன் ஆணிவேரான முதலாளித்துவத்தின் சுரண்டலை அம்பலப் படுத்தாமல் வெறும் நுனிப் புல்லை பிரச்சினை என்று கூறி போராடுவது, நீங்கள் கூறுவது போல் வட்டம் அடித்துக் கொண்டிருக்கத் தான் பயன்படும்... மாறாக அதே கல்லை தனி உடமைக்கு எதிராக படிக்கட்டுகளாய் கட்டி முன்னேறினால் விடியல் மிக சுலபம்... மேலும், ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளும் கொள்கை ரீதியாக மார்க்ஸ் மற்றும் மாவோவை ஏற்றுக் கொண்டாலும், எங்கோ ஒரு இடத்தில் நீ போலி என்று குற்றச்சாட்டில் பிளவு பட்டு இருப்பதும் ஒரு தடை கல் தான்...
Post a Comment